அம்மா... இன்னைக்கு ஒரு பொணம் விழணும், ஏங் குடியக் காப்பாத்து தாயே! கோடைக்குக் குடும்பத்தோட மொட்ட போட்றேன்
‘ஓவென’ அலறும் சத்தம் கேட்ட தெருவினை நோக்கி ஓடத் தொடங்கினான் மாரிமுத்து. இருபுறமும் சிறு சிறு தொடர்வீடுகள் கொண்ட பதினைந்து அடி முக்கிய வீதியின் முடிவில் இருந்து அப்போது தான் இரண்டு பத்தடி குறுக்குத் தெருக்களைத் தாண்டி தன் பழைய பேப்பர் சுமந்த சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்திருந்தான்.
கீழே விழுந்த தனது சைக்கிளையும், அதில் காலையிலிருந்து எட்டு கிலோமீட்டர் அலைந்து திரிந்து, பக்கத்து வீட்டு நாகம்மாவிடம் கைமாத்தலாக வாங்கி வந்த நூறு ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு மட்டுமே சேகரித்து வைத்திருந்த பழைய பேப்பர்கள் சிதறி விழ, அதன் மீது காலையில் அங்காயி தூக்குச்சட்டியில் ரெண்டு சின்ன வெங்காயத்துடன் கொடுத்து விட்ட பழைய கஞ்சியும் கொட்டிச் சிதறி தெருவெங்கும் ஓடியதை திரும்பிக் கூடப் பாராது சத்தம் கேட்ட கடைசி குறுக்குத் தெருவை நோக்கி ஓடினான்.
அங்கு இரண்டு கைகளையும் கால்களையும் அகற்றிய படி நின்றிருந்த மலர்ஜோதி தீயில் ஜீவாலை விட்டு எரிந்து கொண்டிருந்தாள். அடுத்த வீட்டுப் பாட்டி தனது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ‘ஓவென’ அலறிக் கொண்டிருந்தாள்.
*
உயிர்த்தெழும் ஆரல்பறவை ஒன்று ஒப்பிட இயலாத உடல் மொழியினை தன் நெருப்பின் இறகுகளால் அவளை சுற்றி வந்தது. சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் அப்பறவை, திராணியற்று சுற்றியது. அதனைச் சுற்றித் தீப்பிழம்புகள் வெடிக்கிறது, மேலும் தீக்குவியலைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்கும் வரை அது ஆசுவாசப்படுவதாய்த் தெரியவில்லை.
*
இன்றோடு பத்து நாளாகி விட்டது. ஊரிலிருந்து யாரும் வந்தபாடில்லை. மிராசு, சென்ற வாரம் அவரின் தோட்டத்திற்குக் செல்கையில் எதிரில் வந்த சின்னராசுக்கு கொடுத்து சென்ற முப்பது ரூபாயில், கையிலிருந்த கடைசி ஏழு ரூபாய்க்கு வாங்கி வந்த கொஞ்சம் அரிசியும் பருப்பும் நேற்று இரவோடு காலியாகி விட்டது. மயானத்திற்குப் பக்கத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு வரும் போதெல்லாம் சின்னராசுவிற்குக் கையில் ஏதாவது கொடுப்பது வழக்கம். அதுவும் எப்போதாவது தான். காவலில்லா தனது தோட்டத்திற்கு இப்படியாக செலவை மிச்சப்படுத்திருந்தார் மிராசு.
இன்றும் பட்டினி தான். சின்னராசுக்கு அது பழக்கமாகி இருந்தது. சென்ற வாரம் பிரசவித்த தனது பேத்திக்குத் திடமான தாய்ப்பால் கொடுக்க முடியாது பட்டினியில் வாடும் மகளுக்குத் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது அவனை நிலை குலைய வைத்தது.
குடிசையின் தட்டியை நகர்த்தி, சாணி மொழுகியிருந்த தரையில் கால் வைத்த போது இத்தனை நேரம் பசியால் அழுது களைத்து தூங்கிப் போயிருந்த தனது பேத்தி விழித்து விடாமல் இருக்க பூனை போல மெல்ல கால் வைத்து தலை தட்டாது குனிந்து நடக்க ஆரம்பித்தான். கண் முன்னே சுவரில் மாட்டியிருந்த மேலத்தெரு வெயில் மாரியாம்மாவைக் கும்பிட்டு கண்மூடி வேண்டினான்.
‘அம்மா! இன்னைக்கு ஒரு பொணம் விழணும், ஏங் குடியக் காப்பாத்து தாயே! கோடைக்குக் குடும்பத்தோட மொட்ட போட்றேன்’ சத்தமாக சின்னராசு சொல்ல,
‘என்னய்யா இது நீயா! பொணம் வர்றன்னைக்குல்லாம் ஒரு நா சாப்டாம கெடப்ப, இப்பென்ன?’ ஆச்சர்யமாக கேட்டாள் வடிவழகி.
‘மார்வத்தி நீ கெடக்குற கொடுமய என்னால பாக்க முடில தாயீ’
‘அதுக்கு ஊருல எல்லாஞ் சாவணுமா?’
‘பச்ச மண்ணு, வவுறு வத்தி போச்சே தாயீ’
‘மார்வத்தி போனாலுங் மானங்கெட்டு போகல வோம்மவ’
‘தாத்தங் கஷ்டந் தெரிஞ்சு வளருவா ஏம்புள்ள, நீ வாயப் பொத்திட்டு போ’
‘இல்ல தாயீ, மனசுங் கேக்கல, வயிருந் தாங்கல’
‘இந்தா பிடி, போயி கம்பு வாங்கி வா, கம்மங்கஞ்சு வடிக்றேன்’ என தன் குழந்தையில் காலில் இருந்த காப்ப கையில் கொடுத்தாள், வடிவழகி
‘வேணாந்தாயீ, நா நாட்டாமய பாத்து கொஞ்சம் நெல்லு வாங்கியாறேன்’ என்ற படி வெளியே வந்த சின்னராசுவிற்குக் கண் கலங்கி இருந்தது.
தனது தேவைக்காக ஊர்ல ஒருத்தர சாகக் கேட்டோமே என குறுகிப் போனான்.
*
மாரிமுத்துவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஓட்டு வீடுகளுக்கு இடையில் சின்னச்சின்ன மச்சு வீடும் இருந்த அந்த பத்தடி சந்தில், வாசக்கட, பொழக்கட என ஒன்றாகி மேலும் குறுகலாயிருந்தது. குபுகுபுவென எரியும் நெருப்பைக் கண்டு அதிர்ந்த மாரிமுத்து சுதாரிப்பதற்குள், தீயோடு கரும்புகையுமாக நின்றவள் தரையில் விழுந்தாள்.
வயது பதினாலு இருக்கும், நல்ல திடமான உடம்பு முழுவதுமாகக் கருகி ஆங்காங்கே சிவந்து வெடித்திருந்தது. வாய் ஏதோ முணுமுணுத்தது. உச்சி வேளையாதலால், வேலைக்குப் போன யாரும் வீடு திரும்பாததால் தெரு வெறிச்சோடிந்தது. ஓடி வந்த பாட்டி ஏதோ சொல்ல, மாரிமுத்துவிற்கு எதுவும் காதில் விழவில்லை. காலையிலிருந்து இரவு வரை ஓடி ஓடி வேலை பார்க்கும் மாரிமுத்துவிற்குக் கையையும் காலையும் யாரோ கட்டிப் போட்டது போலிருந்தது.
மலர்ஜோதியின் உடம்பில் ஒட்டுதுணி கூட இல்லை. அனைத்தும் தீயில் கருகி ஆங்காங்கே அவளின் அங்கங்களில் அப்பியிருந்தன. கண்மூடி சுதாரித்த மாரிமுத்துவின் காதில் பாட்டியின் சத்தம் மெல்ல கேட்கத் தொடங்கியது.
‘தூக்குப்பா, தூக்குப்பா, அடிப்பாவி மக, இப்படி பண்ணிட்டாளே, ஓடிப் போன மூதேவி வௌங்காமப் போயிடுவா’
‘பட்டு ரோசா, கருகிப் போச்சே, தூக்குப்பா, தூக்குப்பா’ என்றவாறே ஓடி வந்தாள் பாட்டி.
‘ஒட்டுத் துணியில்லம்மா, நானெப்படி’
‘வோந்தங்கச்சியா நெனைச்சு தூக்கப்பா, நீ நல்லாருப்ப’
மூளை ராக்கெட் வேகத்தில் செயல்பட்டாலும், கால்களும் கைகளும் சண்டிக்குதிரையாய் திரும்பி நின்றன. அங்கிட்டு இங்கிட்டு பார்த்து எதிரில் இருந்த ஓட்டு வீட்டின் திண்ணையை வெயிலுக்கு மறைக்க தொங்க விட்டிருந்த சாக்குப் பையைச் சூறாவளி காற்றாய் எடுத்து மலர்ஜோதி மீது வீசிய வேகத்தில் அவளை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
‘பாட்டி, பெரியாஸ்பத்திரி கூட்டிப்போவா?’
‘எங்கனாலும் போ சாமி, உயிரிருக்கு’
பாட்டியின் பதிலைக் கூட கேக்காது, அவளை தூக்கிக் கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினான்.
காலையிலிருந்து சாப்பிடாமல் அழைந்த களைப்பெல்லாம் எங்கே? என்பது போல நாலே எட்டில் மெயின் ரோட்டிற்கு சென்று விட்டிருந்தான் மாரிமுத்து. எதிரே வந்த சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்துமாறு கதறினான். மதியவேளையில் ரோட்டிலும் ஆங்காங்கே சிலர் மட்டுமே இருந்தனர். ரிக்ஷா ஓட்டுபவனோ காதில் விழாதது போல பார்த்துக் கொண்டே ஓடி விட்டான். கால்கள் இடறி வழிந்தோடும் ரத்தத்தினை பொருட்படுத்தாது ஓடினான். நாகரீக உலகில் உதவ ஒரு நல்லவன் கூட இல்லாது போல் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். அதிலொருவன் உதவதான் ஓடிவருகிறான் என்பது போல வந்து ‘என்னாச்சு’ என்பது போல விசாரிக்க தொடங்கினான்.
மாரிமுத்துவிற்கு எதும் காதில் விழவில்லை. பெரியாஸ்பத்திரியை நோக்கி ஓடினான். உடலின் கருகிய வாடை பசி மயக்கத்திலிருந்த மாரிமுத்துவிற்கு ஒருவித குமட்டலை அளித்தது. ரோட்டின் ஓரத்தில் இருந்த தள்ளுவண்டியில் மலர்ஜோதியைக் கிடத்தி முடிந்த மட்டும் கிழிந்த சாக்குப் பையைக் கொண்டு அவளின் உடலை மறைத்து தள்ளுவண்டியை பெரியாஸ்பத்திரியை நோக்கி தள்ளத் தொடங்கினான்.
*
அந்தத் ஆரல்பறவை எந்த காயத்தையும், எந்த நோயையும் குணப்படுத்தும் திறன் கொண்டது, மேலும் அதன் கண்ணீருக்கு எந்த நோயையும் குணப்படுத்தும் சக்தி உள்ளது. இது தீர்க்கதரிசன பரிசைக் கொண்டிருப்பதாகவும், எதிர்காலத்தைப் பார்க்கும் திறன் மற்றும் பெரிய நிகழ்வுகளை முன்னறிவிக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தள்ளுவண்டியின் மேலே பறந்து வரும் ஆரல்பறவையின் கண்களில் கண்ணீர் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
*
மேட்டுத்தெருவை ஒட்டிய காளிகாம்பா கோயிலுக்கு பின்னாடி இருந்தது நாட்டாமையின் ரெண்டு தட்டு திண்ணை வீடு. ஊரிலேயே மிகப்பெரிய வீடு அவருடையது தான். பொழக்கடையில் காங்கேயங்காளை இரண்டு அசைப்போட்டு கொண்டிருக்க, அந்த மதிய வேளையில் வீடு அமைதியாக இருந்தது.
‘சாமீ சாமியோவ்’ என சின்னராசு மெல்ல குரலெடுத்து கூப்பிட, உள்ளுக்குள் எந்தவொரு சப்தமோ, பதிலோ இல்லை.
‘சாமீ… நான் சின்ராசு சாமியோவ்’
என கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட, உள்ளுக்குள் சில சப்தம் கேட்டது. சின்னராசுவிற்கு நெல்லே கிடைத்து விட்டது போல சந்தோசம். முகம் பிரகாசித்தது, கண்கள் ஒளிர்ந்தன. ஆனாலும், வாசலில் யாரும் தட்டுப்படவில்லை.
சின்னராசுவிற்கு தயக்கம். அழைக்கலாமா? சாமி உள்ள தூங்குறாவளோ என்னவோ?
சிறிது அச்சமும் தான். பக்கத்தில் யாரும் இல்லை. தனது மயானம் கூட இதைவிட நன்றாக, செழிப்பாக, காக்கைகளாலும், குருவிகளாலும் நாய்களாலும் ஒருவித பரபரப்புடன் இருக்கும் என எண்ணிக் கொண்டான். சிறிது தாமதித்து சாமீ என குரலெடுக்க, ‘யாரு’ என வாசலில் சுமார் முப்பது முப்பத்தியிரண்டு வயதை ஒட்டிய சிவந்த நிறமுடைய பெண் வந்து நின்றாள். சின்னராசு இதற்கு முன்பு இவளை பார்த்ததில்லை. நாட்டமையையோட பொண்ணா? இல்லையே, அவருக்கு பொண்ணுங்க யாரும் கிடையாதே, என்றபடியே அவளை அப்படியே பார்த்து சின்னராசு நிற்க, ‘யாருடா அது’ என்றவாறே குட்டையாய், கருப்பாய், நெற்றியில் குங்குமமிட்டு, தலையில் எண்ணெய் விட்டு சீவி, நீண்ட மீசையை முடுக்கியபடியே வந்தார் நாட்டாமை.
‘சாமீ கும்புடுறேன்க’ என்றான் சுதாரித்தாவாறு.
‘என்னடா சின்னராசு, என்ன ஊருக்குள்ள திரியுற, வொன்னும் சாவு வொழலையோ’ என்றார் நாட்டாமை.
‘ஆமாஞ்சாமீ, போன மாசந்தேன் ஒன்னு வந்துச்சு’ என்றவாறே தலையை சொறிந்த சின்னராசுவின் தேவையைப் புரிந்து கொண்டார் நாட்டாமை.
ஊருக்குள் பாதிக்கும் மேல நாட்டாமை சொத்து தான். சாதிசனம், கோவில், பள்ளிக்கூடம் என அனைத்திற்கும் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் தான் நாட்டாமை. எங்கும் அவருக்குத் தான் முதல் மரியாதை. பார்ப்பதற்குத் தான் முரட்டுத் தோற்றம், ஆனால் மனதில் நல்லவர் தான் நாட்டாமை, ஒன்றைத் தவிர.
நாட்டாமையின் மனைவியும் சென்ற வருடம் இறந்து போனார். மயானத்தில் சின்னராசு தான் எல்லாம் செய்து முடித்தான். நாட்டாமையின் பிள்ளைகள் படித்து வெளிநாடு சென்றது தான் பின் அம்மாவின் மரணத்திற்கு கூட வரவே இல்லை. நாட்டாமையும் அவர்கள் வரும் வரை காத்திருக்கவில்லை.
இவ்வளவு நல்லவருக்கும் ஒரு கெட்ட பழக்கம், பெண்கள் சகவாசம். நாட்டமை மனைவியின் சாவு கூட என்னமோ அது இது என பேசிக் கொண்டார்கள். எரித்து எல்லா சடங்குகளும் முடிந்த மறுதினம் சின்னராசுவை வீட்டிற்கு அழைத்து கையில் ஐநூறு ரூபாய் கொடுத்தார் நாட்டாமை. இதுவரை சின்னராசு நூறு ரூபாய்க்கு மேல் வாங்கியதே இல்லை. ஐம்பது பத்து ரூபாய்களை நாட்டாமை கொடுத்த போது வாயாடைத்து நின்றிருந்தான் சின்னராசு.
‘எப்ப வேணும்னாலும் வா’ என்று சொல்லியே அனுப்பி வைத்தார் நாட்டாமை. அதனை வைத்து தான் தனது மகளுக்குச் சிக்கனமாகக் கல்யாணம் செய்து வைத்தான் சின்னராசு.
‘சாமீ… மக புள்ள பெத்துருக்கு, கைல வொன்னுமில்ல, அதான்’ என்று தலை சொறிய
‘உள்ள போயி ஐம்பது ரூபா எடுத்துவாமா’ என அந்த நடுத்தர பெண்ணிடம் கூற அவளும் உள்ளே சென்றாள். போகையில் அவள் சின்னராசுவைப் பார்த்த பார்வை அப்படி ஒன்றும் நல்லாதாகப் படவில்லை.
‘ஆமா, மிராசு தோட்டத்த நீ தான் பாத்துகிறீயாடா, ஏதாச்சும் தர்றானா? கஞ்சப்பய’ என்றார் நகைத்தபடி.
‘சாமி வர்றப்ப போறப்ப ஐஞ்சு பத்து கொடுப்பாருங்க’ என்றான் சின்னராசு.
‘ஆங்..’ என்ற போது உள்ளிருந்து ‘என்னங்க’ என்று குரல் கேட்க, இதோ வர்றேன் என்றவாறு உள்ளே சென்றார்.
சிறிது நேரங்களித்து வந்த நாட்டாமை, ‘டேய், நாளக்கி வா’ என இவன் இருப்பதையே பொருட்படுத்தாமல் உள்ளே சென்று விட்டார்.
*
கிருமிநாசினியும் கழிவு நீரும் சேர்ந்து ஒருவித அடர்ந்த நாற்றங்களுடன் கூடிய வெராண்டா ஒன்றில் மலர்ஜோதியைக் கிடத்திவிட்டு டாக்டரைத் தேடி அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக் கொண்டிருந்தான் மாரிமுத்து. நீண்ட காத்திருப்பின் வெறுப்பில் இருந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் மலர்ஜோதியின் மரண ஓலம் கேட்கவில்லை.
வழக்கத்தை விட பெரியாஸ்பத்திரி அதிகமான கூட்டத்துடனும், மிகுந்த ஆரவாரத்துடனும் இருந்தது. பராமரிப்பு இல்லாத சுவர்கள், உடைந்த ஓடுகள், நீர் அற்ற கழிவறைகள் என சுகாதாரமற்ற நிலையில் நோயாளிகள் படுக்கையின்றி தரையில் படுத்துக் கிடந்தனர்.
மலர்ஜோதி அசைவற்று இருந்தாள். அவள் மீது ஈக்கள் மொய்க்க தொடங்கியிருந்தன. மலரின் மீது ஆர்வம் கொள்ளும் தேனீக்களைப் போல கழிவறையின் ஈக்கள் இப்போது வெந்து வெடித்திருந்த சதைப்பிண்டங்களைச் சுவைக்கத் தொடங்கி இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மக்கள் அவளை சற்று தள்ளி நின்று பார்த்து அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மாரிமுத்து பெரும் அலைச்சலுக்குப் பின் நர்ஸை அழைத்து வந்திருந்தான். முகம் சுளித்துக் கொண்டே வந்த நர்ஸ் மலர்ஜோதியை பார்த்தவுடனே மூக்கை மூடிக் கொண்டு புரிந்து கொண்டாள் அனைத்தும் முடிந்து விட்டது என.
‘இதுக்கு, நீ என்ன வேணும்’ என மலர்கொடியை அஃறிணையாக்கி நர்ஸ் கேட்க, அப்போது தான் மாரிமுத்துவும் உணரத் தொடங்கினான்.
‘யாரிவள்?’
சிறிது உறைந்து போய் நின்றிருந்த மாரிமுத்துவை ‘இதுக்கு நீ என்ன வேணும், போலீஸ்க்கு சொல்லியாச்சா?’ என சிறிது அதட்டி கேட்க, சுயநினைவிற்கு வந்து ஏதோ உளறினான்.
நர்ஸ் சந்தேகப் பார்வையுடன் மாரிமுத்துவை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். மலர்ஜோதி முழுவதுமாக அடங்கி இருந்தாள்.
‘யாரிவள்’ மாரிமுத்துவிற்குள்ளும் இந்த கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது. வாடிவாசலில் இருந்து வெளி வரும் காளைகளின் பாய்ச்சலில் இருந்த மாரிமுத்து இப்போது சற்று சுதாரித்திருந்தான். டாக்டரிடம் நடந்தவற்றை கூறினான். அனைத்தும் கேட்ட டாக்டர் அவனுடன் வந்து மலர்ஜோதியை பரிசோதித்தார். மரணம் உறுதி செய்யப் பட்டது. போலீஸுக்கும் தெரிவிக்கப் பட்டது.
*
சின்னராசு வெறும் கையுடன் மயானம் திரும்ப மனமில்லாது வெற்றுப்பாதையில் நடக்கலானான். சூறாவளியாகத் தன்னைக் கடந்த தள்ளுவண்டியினைப் பார்த்த போது அவனுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.
வெற்றுக்கட்டையில் சாக்குப் பையைச் சுற்றிய அந்த கருகிய உடல் மெல்ல அசைந்து கொண்டிருந்தது.
தன்னையும் மீறி பின் தொடர்ந்தான். பெரியாஸ்பத்திரியில் நல்ல கூட்டம், அனைத்திலும் உள்ளூர் ஆட்கள் அவ்வளவாக இல்லை.
கழிவறை அருகே கிடத்தப்பட்டிருந்த, பாதி வெந்து முடிந்திருந்த இவ்வுடல் இன்று எப்படியும் தன் மயானம் வந்து விடும் என்று அவன் முழுமையாக நம்பினான். யார் இதன் உறவினர்கள் என தேடி பார்க்கத் தொடங்கி, மாரிமுத்து, போலீஸ் என சுற்றி முடித்திருந்த போது இது அனாதை பிணம். போலீஸிடம் இருந்தும் ஒன்றும் தேறாது என்று அறிந்த போது சிறிது கஷ்டமாக இருந்தது.
இந்த சின்னப்பெண்ணைப் பார்க்கும் போது தனக்கு பெண்ணிருப்பதும் அவளுக்காக தான் துடிப்பதும், அதைப் போல இந்த பெண்ணுக்கும் சேர்த்து இவன் உள்ளம் துடிக்கத் தொடங்கியது. போஸ்ட்மார்ட்டம் முடிந்து நாளை தான் உடல் மயானத்திற்கு வரும். அதற்கான தேவைகளை செய்ய வேண்டும் என்று மனம் உறுத்த மயானம் நோக்கி நடக்கலானான் சின்னராசு.
*
இருண்ட மாலையில் போலீஸார் நாட்டாமை வீட்டின் உள்ளறையில் மலர்ஜோதியின் மரணம் குறித்து பேசப்பட்டது. உள்ளே நடுத்தர வயது பெண் குலுங்கிக் குலுங்கி அழுகும் ஓசை கேட்டது. நாட்டாமை போலீஸிடம் அனைத்தையும் நல்ல விதமாக நடத்திக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். கட்டாகப் பணமும் கொடுத்தார்.
அவ்வப்போது சந்தித்துக் கொண்ட தேவைகள் இரண்டும் நிரந்தரமாக, ஒன்றாக வாழ்வதாக முடிவெடுத்தன. நாட்டாமைக்கு இளமை வேண்டியிருந்தது. பத்தடி தெருவில் ஓட்டு வீட்டில் வாழ்ந்த அவளுக்குப் பணமும், உல்லாச வாழ்வும் தேவையாயிருந்தது. பருவம் வந்த பெண் இருப்பது மறந்து வீட்டை விட்டு ஓடவும் அது தூண்டியது.
யாரும் இல்லாத அவரின் வீட்டில், ஓர் நன்னாளில் தனது மனைவியை நிரந்தரமாக தூங்க வைப்பது நாட்டமைக்கு அப்படி ஒன்றும் கஷ்டமானதாக இல்லை. சில நாட்களில் பத்தடி தெருவில் வசித்து வந்த அந்த இளமை நாட்டாமையின் மாடிவீட்டிற்கு குடியேறியது.
ஊர் பேசியது. அதன் வாயடைக்க நாட்டமை தனது வீடு ஒன்றை ஆரம்பப் பள்ளிக்கு எழுதி வைத்தார். ஊர் வாழ்த்தியது. பின் மறந்தே விட்டது.
சிறு கூட்டில் வாழ்ந்த அந்த மலர்ஜோதி வாடத்தொடங்கி இருந்ததை யாரும் அறிந்திருக்க வில்லை. சிறு வேலைகள் செய்து நாட்கள் நகர்த்தினாலும், அந்த பருவமலர் கோபம், சோகம், குழப்பம், பிரிவு, வலி, கைவிடுதலின் தனிமை, இளமையின் மிச்சம், என பல உணர்ச்சிகளின் ஊடகமாக தவித்திருந்தாள். சுயமரியாதைகள் இல்லாத ஒருவித வெறுமை, நம்பிக்கையின் மீதான ஏமாற்றம், உறவுமுறை சிக்கல்கள், ஆதரவின் பிரிவினையும் அதனான புரிதல்களையும் எதிர்கொள்ளும் மனநிலையில்லை பெருவித மனச்சிதைவிற்கு ஆளாகி இருந்தாள்.
தேவையின் அருகாமையை உணர்வதை விடுத்த அதிர்ச்சி, மனச்சோர்வு, உணர்ச்சிகளின் தவிப்பு, குற்ற உணர்வின் வலிகள் அவளை ஒரு வித தீவிர மனச்சிதறல் அவளைத் தற்கொலை எண்ணங்களுக்கு வழி வகுத்தது. யாருமற்ற அந்த உச்ச பகல் வேளை அவளின் உணர்ச்சிகளின் தீய எண்ணங்களுக்கு வித்திட்டது. அவளின் உள்ள எரிச்சலின் வெப்பத்தைக் காட்டிலும் வெளியில் அவள் தனக்கு இட்டுக் கொண்ட வெப்பம் அவ்வளது கடினமானதாக இல்லை.
தீயில் எவரும் துடிப்பதைப் போல அவள் துடிக்க வில்லை. உள்ளத்தின் வெப்பமும் உடலை எரிக்கும் வெப்பமும் ஒன்றாகும் ஒரு வித சமநிலை அவளுக்கு வெகுமாகப் பிடித்திருந்தது. அவள் தீயுள் கரையத் தொடங்கிய தருணம் தான் தன்னைத் தூக்கி வளர்த்த அடுத்த வீட்டு பாட்டி ‘ஓவென’ அலறியது தூரத்தில் கேட்டது.
*
எல்லாச் சட்டச் சிக்கல்களும் முடிந்து மலர்ஜோதியின் உடல் மறுதினத்தின் சாயங்கால வேளையில் வழக்கமாக வரும் ஒரு கை வண்டியில் தான் மலர்ஜோதியும் வந்து சேர்ந்தாள் தனியாக. ஏற்கனவே பாதி வெந்திருந்த உடலுக்குச் சில விறகுகள் மட்டுமே தேவையாய் இருந்தது.
யாருமற்று வரும் இது போன்ற பொணங்களுக்குத் தானே கொள்ளி போட்டு பின் தனக்குத் தானே மொட்டை போட்டுக் கொள்வது சின்னராசுவின் வழக்கம். மயான தரையில் மண்ணைக் குழப்பி அதனை ஆறடி படுக்கையாக்கி, அதன் மீது சில கட்டைகளைச் சரியாக அடுக்கி மலர்ஜோதிக்கான இறுதிப் படுக்கையை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.
‘அப்பா, அப்பா’ சுற்றும் முற்றும் பார்த்த சின்னராசு யாரும் இன்றி சிறிது தயங்கி நின்றான்.
அருகாமையில் முழுமையாக வெள்ளைத்துணியில் மூடி கட்டப்பட்டிருந்த மலர்ஜோதி அழைப்பதைப் போல உணர்ந்தான் சின்னராசு.
வெள்ளைத்துணியில் இருந்து எழுந்த மலர்ஜோதி, ‘அப்பா’ என அழைக்க, சின்னராசு தனது வேலையை அப்படியே போட்டு விட்டு மலர்ஜோதியின் தலைமாட்டில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘அப்பா, எனது இறுதி பயணத்தில் யாருமில்லை. இந்த வாழ்க்கை, இந்த முடிவு என்னால் விருப்பப்பட்டு எடுத்த முடிவல்ல. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையை வாழத் துவங்கி விட்டார்கள். அவர்களை சார்ந்திருக்கும் எவரையும் அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. வாழ்க்கையைத் தனியாகப் பயணிக்கும் திராணியற்று நிற்கும் என்னைப் போன்றவர்கள், இவ்வுலகில் வாழ தகுதி இழந்தவர்கள் ஆகிறோம்.’
சின்னராசுவிற்கு என்ன பேசுவதென்று தெரிந்திருக்கவில்லை. மௌனமானான்.
தூரத்தில் நாட்டமையின் வண்டிச்சத்தம். நேற்று பார்த்த அதே காங்கேயம் காளைகள் பறந்தோடி வருகின்றன மயானத்தை நோக்கி. சின்னராசு எழுந்து நிற்கும் வேளையில் வண்டி அவன் முன்னே நின்றிருந்தது. அதிலிருந்து நாட்டாமை இறங்கினார். அவரின் பின்னால் அதே நடுத்தர வயதுள்ள பெண் கழுத்து நிறைய நகைகளுடன் தனது பட்டு சரிகை சேலையினால் வாயை மூடி அழுகிறாள். அவளின் முன்னே மலர்ஜோதி எழுந்து ஒன்றை மட்டும் கேட்கிறாள்.
“நான் கேட்காத என்னை, எனக்கு கொடுத்த நீ, என்னை கேட்காது எடுத்துக் கொண்டது நியாயம் தான். உனக்கான தேவைகள், உனக்கான ஆசைகள், உனக்கான வெப்பம், உனக்கான சிலர்; நீயும் உத்தமி தான்”.
வார்த்தைகள் ஒன்றன்பின் ஒன்றாய், அதனில் இரண்டாய், மூன்றாய், இன்னும் பலவாய் சுற்றிச்சுற்றி ஒரு சிறு பிரளயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன.
இது எதுவும் கேட்காத நாட்டாமை அவளின் தோள்களை தடவி அணைக்க, அவள் மலர்ஜோதியை பார்த்து இப்போது அழுகவில்லை. அவளின் உடல் இப்போது நடுங்கத் தொடங்கியது. வண்டியில் அவளை அமர்த்தி விட்டு சின்னராசுவின் கைகளில் ஆயிரம் ரூபாயைத் திணித்து விட்டு உடன் அகன்றார். தூரத்தில் வண்டியோசை மெல்ல கரைந்தது.
மயானத்தின் இந்த அமைதி, சின்னராசுவிற்கு புதிது. நேரம் கடக்கிறது. சின்னராசு அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். அவன் அருகே மலர்ஜோதி வெள்ளையாய், ஆயிரம் ரூபாய் கருமையாய், இருவரும் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.
நேற்றைய மறுப்பு, இன்றைய வரவு; நேற்றைய இருப்பு, இன்றைய செலவு.
*
அவள் வலியை எரித்துவிட்டு புதிதாக ஆரம்பிக்க வேண்டும். ஆரல்பறவை தன் துக்கத்தை கடந்து, வாழ்க்கையின் அவலங்களைக் கண்டு சகிக்க இயலாத நிலையில் கண்களை முடியது. இன்றைய பகல் மெல்ல இருளத் தொடங்கியது. நிலவின் ஒளிச்சிதறலுடன், கண்மூடிய ஆரல்பறவை மலர்ஜோதியின் வெண்ணிற துணியில் வீழ்ந்து மயானமெங்கும் தீப்பிழப்புகளைத் தெறித்தது.
மலர்ஜோதியும் சுடர் விட்டு எரிகிறாள்.
*
உதிரிகள் – இளவேனிற் இதழில் வெளியானது. – 2023.
Share This:
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)